உலகம் தழைக்க 19-ம் நூற்றாண்டில் நம் தெய்வத் தமிழ்நாட்டில் அவதரித்தவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவார். அவர்கள் ஓதாதே உற்ற கலைகள் அனைத்தையும் உணர்ந்து தேன் தமிழில் “திருவருட்பா” பாடி, மனித குலம் உயர்வு பெற மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திட வழிகாட்டியவர். வாழ்ந்தும் காட்டியவர்.
வள்ளலாரின் அன்பு நெறியையும் போதனைகளையும், உலகியல் கல்வியையும் இணைத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பொருட்டு இந்நிறுவனம் துவங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சன்மார்க்கம் பரவ தொண்டு செய்த மாத்தூர் தவத்திரு. “ப.அருணாச்சல சுவாமிகள்” தானமாக கொடுத்த சொத்துக்கள், நன்கொடைகளைக் கொண்டு சென்னை அருட்திரு உயிர் உறவு கூ. சங்கரய்யா அவர்கள் சீரிய வழிகாட்டுதலோடு “வள்ளலார் மாணவர் இல்லம்” (42/1986) பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்க மேற்பார்வையில் செயல்படுகிறது..
22.06.1986 அன்று அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு இல. பழமலை. இ.ஆ.ப. அவர்களால் வள்ளலார் மாணவர் இல்லம் திறந்து வைக்கப்பட்டது. 16 ஏழை, எளிய மாணவர்களுடன் துவங்கப்பட்ட இவ்வில்லத்தில் இருந்து கடந்த 38 ஆண்டுகளில் சுமார் 2080 மாணவர்கள் பயின்று வெளியே சென்றுள்ளனர். “தற்சமயம் 2025-26 கல்வி ஆண்டில் 105 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை இழந்த, ஏழை, எளிய மற்றும் சன்மார்க்க குடும்பங்களைச் சார்ந்தவர்கள். இங்கு தங்கியுள்ள மாணவர்கள் உள்ளூரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.”
தமிழகத்தின் பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டின் (Every Academic Year) போதும் நிறுவன சேர்க்கை விதிமுறைப்படி தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.