புதுக்கோட்டை மாவட்டத்தில் சன்மார்க்கம் , நீண்ட காலமாகப் பரவி வந்துள்ளது . அதன் விளைவாக மாவட்ட சன்மார்க்க சங்கம் தோன்றியதன் பயனாக மாத்துர் கிராமத்தில் வள்ளலார் மாணவர் இல்லம் 30- ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி ஏழை ,எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் , நல்லொழுக்கப் பண்பாட்டு வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வந்துள்ளது .
சன்மார்க்கப் பெருந்தொண்டர்களும் , சான்றோர் பெருமக்களும் அதன் முன்னேற்றதிற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.
நமது , புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கம் 1983-இல் தோற்றுவிக்கப்பட்டது . தலைவராக புதுக்கோட்டை திருமிகு. நா.முத்துகிருஷ்ணன் அவர்களும், அரிமளம் நல்லாசிரியராகிய திருமிகு. சதா. மாணிக்கனார் Avl செயலாளராகவும் , பொருளாளராக புதுகை திருமிகு. சுப. சின்னப்பா அவர்களும் பொறுப்பேற்றனர்.
துணைத்தலைவராக திருமிகு.சீ.சங்கரனார் அய்யா அவர்கள் பொறுப்பேற்றார்.
மாத்தூர் தவத்திரு .அருணாச்சல சுவாமிகள் அவர்கள் தம் உழைப்பால் ஈட்டிய செல்வத்தையும் , திருப்பராய்த்துறை தபோவனத்தில் அளித்து அங்கே தங்கும் எண்ணமுடையவராக இருந்தார்.
அதுசமயம் , சங்கரய்யாஅவர்களின் மூத்த மகன் முருகேசனின் திருமணம் சென்னையில் நடக்க இருந்தது. மூக்கம்பட்டி அன்பர் திருமிகு. வீரையா அவர்கள் , திருமிகு. அருணாச்சல சுவாமியை அழைத்துக்கொண்டு சங்கரையா இல்லத்திற்கு சென்றார் .
திருமிகு. அருணாச்சலசுவாமியின் உழைப்பும் ,செல்வமும் தாம் வாழும் கிராம பகுதி மக்களுக்கும் சன்மார்க்க வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார் .
சாமிகளும் , தமது சொத்துக்களை திருமிகு .சங்கரய்யா அவர்கள் ஏற்று தமக்கு நல்வழிகாட்ட வேண்டுமாறு கூறினார். சாமியின் வேண்டுகோளை ஏற்று திருமிகு .சங்கரய்யா Avl சன்மார்க்க குருகுலம் அமைக்க மாவட்ட சன்மார்க்க சங்கத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் துணை அமைப்பாக அதன் மேற்பார்வையின் கீழ் நிர்வாக குழுவை அமைத்து வள்ளலார் மாணவர் இல்லம் தொடங்க உயிர் உறவு சங்கரய்யா அவர்கள் வழிகாட்டினார்கள் .
பொதுவாக வசதி இல்லாத ஏழை மாணவர்களையும் , பெற்றோரை இழந்த பிள்ளைகளையும் இல்லத்தில் சேர்த்து அவர்களுக்கு உணவு உடை இருப்பிடம் நற்கல்வி அளித்து பராமரித்தல்.
வள்ளலார் இராமலிங்க அடிகளின் சன்மார்க்க நெறியில் பயிற்றுவித்து மாணவர்களை ஒழுக்க சீலர்களாக ஆக்குதல்.
சிறு கைவினை மற்றும் கிராமத்தொழில்களை ஏக காலத்தில் பயிற்றுவித்து பள்ளி கல்விக்குப் பிறகு சுயவேலை மேற்கொள்ள ஊக்குவித்தல்.
மாணவர் இல்லத் தலைவராக நீதிபதி.சீர்சான்ற கு.ரா.பஞ்சாட்சரம் பி.ஏ.பி.எல்., அவர்கள் மற்றும் துணைத்தலைவர் ,செயலர், பொருளாளர் முதலான நிர்வாகக் குழுவினரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தவத்திரு. அருணாச்சல சுவாமிகள் மனமுவந்து ஒன்றே முக்கால் ஏக்கர் நிலமும் பம்புசெட்டுடன் கூடிய கிணறும் குடியிருக்கும் கல் மண்டபமும் தொகை ரூ. இருபதாயிரம் (20,000) ஆகியவற்றை தானமாக வழங்கினார்கள் . மேலும் ,தனது வைப்பு நிதி தொகையினையும் பெற்றுக்கொள்ள ஆவண செய்தார்கள்.
22.06.1986 இல் புதுகை மாவட்ட ஆட்சியாளர் திருமிகு. இல.பழமலை,இ.ஆ.ப,. அவர்கள் வள்ளலார் மாணவர் இல்லத்தை தொடங்கி வைத்தாரகள். நீதிபதி. தயவுத்திரு. பஞ்சாட்சரம் இல்லத் தலைவராகவும் , நிர்வாகக் குழுவினரும் பொறுப்பேற்றார்கள்.
நெடுஞ்சேரியைச் சேர்ந்த திருமிகு. மு.சுந்தர்ராஜ் பி.காம்., அவர்கள் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். பதினாறு மாணவர்களுடன் தொடங்கிய இல்லத்திற்கு பல்வகையிலும் கிராமத்தார்களும் கிளைச்சங்க அன்பர்களும் உதவினார்கள். இல்லத்தரசியர் பலர் பிடியருசி திட்டம் மூலமாக உணவுத்தேவைக்கு உற்றுழி உதவினர்.
மாத்தூரில் பல தலைமுறைகளாக சைவ நெறி நின்ற திருமிகு. நல்லப்பா அவர்களின் மூத்த மகன், துணைத்தலைவர் திருமிகு. கணேசன் Avl 30 சென்ட் நிலத்தை இல்லத்திற்கு தானமாக வழங்கினார்கள்.
22.06.1994 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு.இ.சந்திரசேகர் இ.ஆ.ப., அவர்கள் மாணவர்கள் தங்குவதற்காக புதியதாக கட்டப்பட்ட ஓட்டுக் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.
மாணவர் இல்ல வளர்ச்சிக்கும் , தேவைகளை ஈடு செய்வதற்கும் உதவியாக அறக்கட்டளை ஒன்று அமைக்க வேண்டிய அவசியம் தேவைப்பட்டது. மாணவர் இல்ல சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமிகு .இராம.ராமலிங்கம் பி.ஏ.பில்., அவர்களின் ஆலோசனையின் படி வள்ளலார் அறக்கட்டளை உருவாயிற்று .
உயிர்உறவு திருமிகு. சங்கரய்யா அவர்களே தலைவராகவும் , பதவி வழி மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவரும் இடம் பெற வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
பதிவு எண்: 208/199
வரிவிலக்கு: 80 ஜி
கணக்கு எண்: 478079125
வங்கி: இந்தியன் வங்கி – புதுகை .
ஐ.எப்.எஸ்சி. கோடு எண்: OOOPO50
ஒருமுறை நம் வள்ளலார் மாணவர் இல்லத்தில் நடைபெற்ற சத்விசார கூட்டத்தில் , மாவட்ட தோட்டக்கலைத் துறை தலைவர் திரு. சண்முகசுந்தரம் Avl வருகை புரிந்து கலந்து கொண்டார் .அவர், மாணவர் இல்லத்தின் செயற்பாடுகளையும் , மூலிகை மருந்து தயாரிப்பு பற்றியும் அறிந்து கொண்டார்
அதன் விளைவாக அரசு மானியத்துடன் சலுகை விலையில் மூலிகை அறவை இயந்திரங்கள் பெற்றிட வழிவகை செய்தார்.
மாணவர் இல்ல துணைத் தலைவரும் , ஆலங்குடி முன்னாள் பேரூராட்சி தலைவருமாகிய திரு.மெ.ராமச்சந்திரன் Avl தமது 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவாக 2.5 இலட்சம் ரூபாய் மதிப்பில் மூலிகை அறவைக் கூடம் கட்டிக்கொடுத்தார்.
வள்ளலார் அறநிலையம் , சண்முக சுந்தரம் மேலாளர் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் , பொ.பா.து., அவர்கள் தஞ்சை வள்ளலார் மன்றம் சம்பந்தம் , புதுகை கருப்பையா உரக்கடை, மருத்துவர் திருநாவுக்கரசர் – புதுகை, மஹாராஜா பேக்கரி மணிராஜ் , புதுகை பிரகாஷ் ,சென்னை ஆர்.ஜெயராமன் –ரேகா Avl மற்றும் பலருடைய உதவியால் சமையலறை கட்டப்பட்டது.
வள்ளியூர் கோபாலகிருஷ்ணன் , காலடி சாரதாம்பாள் நினைவாக ஜீ.வி. சுப்ரமணியனார், ஜீ.வி.எஸ்.ஜெயலெட்சுமி – டி.ஆர்.ஓ– ஓய்வு , மருத்துவர் . எல். ஹரிஹரன் மற்றும் பலர் கொடையாளர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டது .
இவ்விரு கட்டிடங்களும் 01.10.2006 இல் நீதிபதி. தலைமை தாங்க உயிர்உறவு சங்கரையா முன்னிலை வகிக்க நடுவணரசு உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதி பி.ஏ.,பி.எஸ்.சி.,அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்கள் .